இந்திய பிரதமருக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 23-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா இதுவரை ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை.
மேலும், இந்த விவகாரத்தில் ரஷ்யா மீது மென்மையான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினு(Vladimir putin)க்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்களான ஸ்டீவ் ஷபொர்ட்(Steve Schaford), ஜோ வில்சன்(Joe Wilson), ரோ ஹானா(Roe Hannah) ஆகியோர் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்துவை(Taranjit Singh Chandu) தூதரக அலுவலகத்தில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது, உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய அதிபர் புடினுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர். மேலும், உக்ரைனில் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக இந்தியா பேச வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி திரும்ப முயற்சிக்க வேண்டும் என்றும் அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.