பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை; அமெரிக்கா அறிவிப்பு
பாலஸ்தீன அதிகாரிகளிற்கு விசா வழங்கப்போவதில்லை தெரிவித்துள்ள அமெரிக்கா , அவர்களிற்கு எதிராக தடைகளை விதிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
ஒஸ்லோ சமாதான உடன்படிக்கை மூலம் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன அதிகார சபை மற்றும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது பாலஸ்தீன மக்களின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த அமைப்புகள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதால் அவற்றிற்கு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான வீசாவை வழங்கப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் பல நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.