வெனிசுலா ஜனாதிபதி குடும்பத்திற்கு தடை விதித்தது அமெரிக்கா; அதிகரிக்கும் போர் பதற்றம்
வெனிசுலாவின் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை கடத்தி வரும் கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது.

தடை உத்தரவு
இதையடுத்து, வெனிசுலா நாட்டுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும், வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள், இருநாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த சூழலில், தடையை மீறி சட்டவிரோதமாக கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற வெனிசுலாவின் மிகப்பெரிய கப்பலை அமெரிக்க படைகள் பறிமுதல் செய்தன. இதனால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவின் மருமகன்கள் 3 பேருக்கு எதிராக அமெரிக்கா தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரான்கி புளோரெஸ், கார்லோஸ் புளோரெஸ் மற்றும் எப்ரெயின் காம்போ ஆகியோர் மீது விதிக்கப்பட்ட புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், பனாமிய தொழிலதிபர் ரமோன் கரேடெரோ நெப்பொலிடானோ, 6 நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோதமாக எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 வெனிசுலா கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்கள் மற்றும் நிதி ஆதாரங்களை அவர்களை பயன்படுத்தவோ, அனுபவிக்கவோ முடியாது. மேலும், தடை விதிக்கப்பட்டவர்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வர்த்தகம் செய்வதும் தடுக்கப்படும்.
இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.