டொரண்டோ வீட்டு விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
2025 ஆம் ஆண்டில், டொரண்டோ மற்றும் பெரும்பாகப் பகுதிகளில் (GTA) வீட்டு விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு விலைகள் உயர்வடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசியல் மற்றும் வர்த்தக சூழ்நிலை காரணமாக எதிர்வுகூல்கள் திருத்தப்படுவதாக வீட்டுமனை தொடர்பான நிறுவனமான ராயல் லிபேஜ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், டொரண்டோ பெரும்பாக பகுதியில் வீடுகளின் சராசரி விலை வருடாந்த அடிப்படையில் 2.7% குறைந்து 1,146,100 டொலர்களாக பதிவாகியுள்ளது.
மாவட்டத்துக்குள் டொரண்டோ நகரம் தனித்துவமாகப் பார்க்கும்போது, வீடுகளின் சராசரி விலை வருடத்துக்கு வருடம் 3.1% குறைந்து 1,124,600 டொலர்களாக காணப்படுகின்றது.
அதேபோல், தனி வீடுகளின் நடுத்தர விலை 1,693,200 டொலர்களாகவும், குடியிருப்பு அபார்ட்மென்ட் வகை வீடுகளின் விலை 686,700 டொலர்களாகவும் குறைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் நடக்கும் வர்த்தக மோதல், மதிப்பிழக்கும் கனடா டொலர், சர்வதேச பங்குச் சந்தைகளின் ஏற்றத் தாழ்வுகள் உள்ளிட்ட காரணிகளினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
இந்த அறிக்கையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டொரண்டோவாசிகளில் 45 சதவீதம் தற்போதைய கனடா பொருளாதார நிலைமையில் நம்பிக்கையில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.