கனடாவின் குற்றச்சாட்டுக்குப் பின்பும் இந்தியாவுடன் நட்பு பாராட்டும் அமெரிக்காவும் பிரித்தானியாவும்
கனடா பிரதமர் இந்தியா மீது குற்றம் சாட்டியுள்ள நிலையிலும், இந்தியாவுடனான உறவுகள் தொடரும் என்னும் ரீதியில் அமெரிக்கா முதலான சில நாடுகள் சமிக்ஞை கொடுத்துள்ளன.
கனடாவில் வாழும் சீக்கிய பிரிவினைவாதிகள் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்து, பின் அவர்களை அச்சுறுத்துவது அல்லது கொல்வது முதலான நடவடிக்கைகளில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபடுவதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
Getty Images
தனது நாட்டில் ரகசியமாக தூதரக மட்டத்தில் செய்து முடிக்கவேண்டிய விடயங்களை, வெளிப்படையாக பேசுவதுடன், தனது கூட்டாளர்களான அமெரிக்கா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய Five Eyes என்னும் அமைப்பின் முன் குற்றச்சாட்டுகளாக முன்வைத்துள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
உடனே அமெரிக்கா, கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கூறியது. அதே நேரத்தில், இந்தியா அமெரிக்காவின் வலிமையான கூட்டாளர் என்றும் கூறியுள்ளது.
அதேபோல, பிரித்தானியாவும், இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், இரு நாடுகளின் தலைவர்களும் சட்டத்தின் விதியின் முக்கியத்துவம் தொடர்பில் உடன்படுவதாகவும், விசாரணையின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து வெளியுறவு அமைச்சரும் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடவில்லை. கனேடிய அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், அது கவலைக்குரிய விடயமாக இருக்கும் என்றே அந்நாடு கூறியுள்ளது.
ஆக, கனடா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும் என இந்த நாடுகள் கூறினாலும், இன்னொரு பக்கம் இந்தியாவின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படுகிறது.
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு இணையாக எதிரணியில் நிற்கும் வலிமையான நாடாக இந்தியாவை கருதுகின்றன மேற்கத்திய நாடுகள்.
பிரித்தானியா இந்தியாவுடனான வர்த்தக உறவை நாடுகிறது, அமெரிக்காவோ, பாதுகாப்பு, சுத்தமான தொழில்நுட்பம் மற்றும் ஆற்றல் ஆகிய துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை நாடுகிறது.
ஆக, இந்தியாவை வெளிப்படையாக அவமதிப்பதைவிட இந்தியாவுடன் ஒத்துழைப்பதே நல்லது என சில நாடுகள் கருதுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.