கனடா பிரித்தானியா நட்பு எங்கள் DNAவிலேயே உள்ளது: கனடா அமைச்சர்
அமெரிக்கா, பிரித்தானியாவின் நட்பு நாடு என பிரித்தானிய பிரதமர் கூறிய விடயம் கனடா தரப்புக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது.
ட்ரம்ப் பல்வேறு நாடுகள் மீது வரிகள் விதிக்க இருப்பதாக் கூறிவரும் நிலையில், ட்ரம்பின் வரிவிதிப்பிலிருந்து தப்புவதற்காக ட்ரம்பை சந்திக்க அமெரிக்கா சென்றார் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
அவர் எதிர்பார்த்ததுபோலவே பிரித்தானியா வரிவிதிப்பிலிருந்து தப்பலாம் என்னும் நிலையும் உருவாகியுள்ளது.
ஆனால், ட்ரம்ப் அமெரிக்காவுக்கு லாபம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார்.
Canadian Press
ஆக, அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒரு சிறந்த வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும், அப்படி ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் பட்சத்தில், வரி விதிப்புகளுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும் என நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ட்ரம்ப்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது ஊடகவியலாளர் ஒருவர், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த ட்ரம்பின் அறிக்கைகள் குறித்து நீங்கள் அவருடன் விவாதித்தீர்களா என ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், பிரித்தானிய மன்னர், தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஒரு நாட்டை, அவரது கட்டுப்பாட்டிலிருந்து அகற்ற விரும்பும் அமெரிக்க ஜனாதிபதியின் விருப்பம் குறித்து கவலை தெரிவித்தாரா என ஸ்டார்மரிடம் கேட்டார் அந்த ஊடகவியலாளர்.
அதற்கு, நீங்கள் எங்களிடையே இல்லாத ஒரு பிளவை கண்டுபிடிக்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், எங்கள் நாடுகள் இரண்டும் மிக நெருங்கிய நட்பு நாடுகள் என்று பதிலளித்தார் ஸ்டார்மர்.
ஆனால், கனடா தொடர்பான கேள்விக்கு ஸ்டார்மரின் பதில் துரதிர்ஷ்டவசமானது என கனடா பிரதமர் ட்ரூடோவின் முன்னாள் ஆலோசகரான ரோலண்ட் பாரீஸ் (Roland Paris) தெரிவித்துள்ளார்.
கனடா ஒரு இறையாண்மையுள்ள நாடு என ஸ்டார்மர் கூறியிருக்கவேண்டும் என்கிறார் பாரீஸ். அதற்கு பதிலாக, தனது நிலைக்கும் ட்ரம்பின் நிலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என கூற அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார் ஸ்டார்மர் என்கிறார் அவர்.
ட்ரம்பின் மூடைக் கெடுக்கக்கூடாது என்பதற்காக, எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் ஸ்டார்மர் என்கிறார் பாரீஸ்.
இதற்கிடையில், ஊடகவியலாளர்களை சந்தித்த கனடா வெளியுறவு அமைச்சரான மெலானி ஜோலி (Mélanie Joly), கனடாவையும் பிரித்தானியாவையும் பிரிக்க உலகில் எந்த நாடாலும் முடியாது என்று கூறியுள்ளார்.
பிரித்தானியாவுடன் நெருக்கமான நட்பு என்பது, கனேடியர்களான எங்கள் DNAவிலேயே உள்ளது என்றும் கூறியுள்ளார் ஜோலி.
ஆக, அமெரிக்காவுடன் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் நெருக்கம் காட்டுவதால், கனடா தரப்பு கவலையடைந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை!