ட்ரம்ப் வர்த்தகக் கொள்கைக்கு எதிர்ப்பு ; கார்னியை கடுமையாக சாடிய வேன்ஸ்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் கனடிய பிரதமர் மார்க் கார்னியை, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்வொன்றில் வேன்ஸ் இந்தக் கருத்துகளை வெளியிட்டதாகவும், அந்த நிகழ்வில் அவர் தெரிவித்த கருத்துகள் பின்னர் வெளியாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்னி, ட்ரம்பை விட வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் தான் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகக் காட்டிக்கொள்வதாக வேன்ஸ் விமர்சித்துள்ளார்.
எனினும், பல்வேறு முக்கியமான விடயங்களில் இறுதியில் கார்னி விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்வதாகவும், அதனை கனடாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அவர் சித்தரிப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் புதிய வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கத் திட்டமிட்டுள்ள 50 சதவீத வரி தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக கனடாவில் அமெரிக்க மதுபானங்களுக்கான சந்தை அணுகல் தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவதும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அமெரிக்க மதுபானங்களுக்கான மாகாண ரீதியிலான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கனடிய மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, கனடாவின் வர்த்தக பேச்சுவார்த்தைக் குழுவும் அமெரிக்க அதிகாரிகளும் வாஷிங்டனில் தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றனர். புதிய அமெரிக்க வரிகள் அமுலுக்கு வருவதற்கு முன்னர் உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கனடா மேலும் பல விடயங்களில் அமெரிக்காவிடம் விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளக் கூடாது என அந்நாட்டில் ஒரு பகுதியினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில், கார்னி அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஜே.டி. வேன்ஸின் விமர்சனம் அமெரிக்கா–கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் நிலவும் பதற்றத்தை மேலும் வெளிப்படுத்துவதாக சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.