பதினாறு செல்வங்களைப் பெற்று பெருவாழ்வுடன் வாழ வரலட்சுமி வழிபாடு
நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கு உரிய தினமாகும்.
இந்த நாளில் மகாலட்சுமியை சரியான முறையில் தொடர்ந்து பூஜை செய்து வந்தாலும், மகாலட்சுமிக்கு விருப்பமான விஷயங்களை தினமும் வீட்டில் செய்து வந்தாலே மகாலட்சுமியின் அருள் எப்போதும் நம்முடைய வீட்டில் நிறைந்திருக்கும்.
அதிலும் ஆடி மாதம் வளர்பிறையில் வரும் வெள்ளிக்கிழமையில் வரும் வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, அவளின் மனம் மகிழும் படி பூஜை செய்து, வேண்டிய வரங்களையும், ஆசிகளையும் பெறுவதால் வீட்டில் 16 வகையான செல்வங்களும் குறைவின்றி நிலைத்திருக்கும்.
அவ்வாறு வீட்டில் 16 வகையான செல்வங்களும் குறைவின்றி நிலைத்திருக்க நாம் எவ்வாறு வழிபட வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.
வரலட்சுமி விரத வழிபாட்டினை இரண்டு முறைகளில் செய்யலாம். ஒன்று, வழக்கமாக வரலட்சுமி விரதத்தை வருடந்தோறும் கடைபிடிப்பவர்கள் வீட்டில் கலசம் வைத்து, நோம்பு சரடு கட்டிக் கொண்டு விரதம் இருப்பார்கள்.
மற்றொன்று, புதிதாக வரலட்சுமி விரதம் இருக்க துவங்குபவர்களும், வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் வழக்கம் இல்லாதவர்களும் மகாலட்சுமியின் படத்தை வைத்து வழிபடலாம்.வாசலில் மாகோலம் போட்டு, அந்த கோலத்தில் இருந்தே மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைத்து வந்து வழிபட வேண்டும்.
மகாலட்சுமியை வழிபடும் நேரத்தையும் மூன்று வகையாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று, வரலட்சுமி விரதத்திற்கு முந்தை நாள் மாலையில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, மறுநாள் வரலட்சுமி விரதம் அன்று பூஜை செய்து வழிபடுவது.
இரண்டாவது, வரலட்சுமி விரதம் அன்று காலையில் மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, அன்றைய தினமே காலையில் பூஜை செய்து வழிபடுவது. மூன்றாவது, வரலட்சுமி விரதம் அன்று காலையில் மகாலட்சுமியை அழைத்து, மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் பூஜை செய்து, வழிபடுவதாகும்.
இவற்றில் யாருக்கு எது வசதியோ அந்த முறையில் மகாலட்சுமியை வழிபடலாம்.
வரலட்சுமி விரதம் அன்று மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபடும் போதும், ஒரு எளிமையான விளக்கையும் வீட்டில் ஏற்றி வைத்து வழிபட்டால், 16 வகையான செல்வங்களும் வீட்டில் நிலைத்து இருக்கும். மகாலட்சுமியின் அருளும் நம்முடைய வீட்டில் குறைவில்லாமல் இருக்கும்.
வரலட்சுமி விரத பூஜையை எந்த நேரத்தில் செய்திருந்தாலும் அன்று மாலை, வீட்டின் பூஜை அறையில் எப்போதும் ஏற்றும் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதோடு மகாலட்சுமியின் படத்திற்கு முன்பாக ஒரு தட்டின் ஒரு பகுதியில் ஒரு கைபிடி அளவிற்கு வெள்ளை நிற மொச்சையை பரப்பி வைக்க வேண்டும். தட்டின் மற்றொரு பகுதியில் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.
வெள்ளை மொச்சை, சுக்கிர பகவானுக்குரிய தானியம் ஆகும். அதே போல் பச்சரிசி என்பது மகாலட்சுமிக்கு உரிய தானியம் ஆகும். வெள்ளை மொச்சை மீது ஒரு அகல் விளக்கையும், பச்சரிசி மீது ஒரு அகல் விளக்கையும் வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இப்படி ஏற்றுவதால் வெள்ளை மொச்சை மீது ஏற்றப்பட்ட தீபத்தில் சுக்கிர பகவானும், பச்சரிசி மீது ஏற்றப்பட்ட தீபத்தின் மீது மகாலட்சுமியும் எழுந்தருளி நமக்கு ஆசி வழங்குவார்கள்.
இந்த விளக்கு குறைந்தது அரை மணி அல்லது ஒரு மணி நேரமாவது எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் விளக்கை குளிர வைத்து அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
வரலட்சுமி விரதத்திற்கு மறு நாள் காலையில் தானியங்களின் மீது ஏற்றிய அகல்களை மட்டும் எடுத்து விட்டு, பூஜைக்கு பயன்படுத்திய வெள்ளை மொச்சை மற்றும் பச்சரிசியை யாருக்காவது தானமாக கொடுத்து விடுங்கள். அல்லது ஏதாவது நீர் நிலைகள், செடிகளுக்கு அடியில் என கால்படாத இடத்தில் சேர்த்து விடுங்கள்.
இந்த பரிகாரத்தை செய்த பிறகு யாருக்காவது உங்களால் முடிந்த அன்னதானம், வஸ்திர தானம் அல்லது அவர்களுக்கு தேவைப்படும் ஏதாவது ஒரு பொருளை தானமாக வழங்கலாம்.
தானம் செய்ய செய்ய மகாலட்சுமி, அதற்கு வேண்டிய செல்வங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். அதே போல் சுகபோக வாழ்க்கைக்கு காரணமான சுக்கிர பகவானும், வீட்டில் இருக்கும் கடன், பண பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளை படிப்படியாக குறைய செய்வார்.