வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் ; பிரதான விமான நிலையம் முடக்கம்
வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து நாட்டின் பிரதான விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊகடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கரீபியன் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மோரோன் நகருக்கு மேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கங்களின் மையப்பகுதி அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

நிலநடுக்கங்களின் தாக்கத்தால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து நாட்டின் பிரதான சர்வதேச விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் சில நிமிட இடைவெளியில் ஏற்பட்டதையடுத்து கரீபியன் கடற்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுவரை உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், பாதிப்பு கடுமையாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தொடர்ச்சியான நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் அவசரப்பட்டு வீடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், திறந்தவெளி பாதுகாப்பான பகுதிகளில் தங்கியிருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.