டெல்டா வகை கொரோனாவை எதிர்க்க இவை இரண்டும் மிக முக்கியம்! உலக சுகாதார அமைப்பு

Shankar
Report this article
மக்களிடையே இதுவரை பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில், தென்ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து இருக்கிறது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸ்களும் பரவி வருகிறது. இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் ஆதநோம் கூறியதாவது,
டெல்டா வகை கொரோனா 85 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.
இது பற்றிய கவலை உலகம் முழுவதும் நிலவுகிறது. தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களிடம் வைரஸ் வேகமாக பரவுகிறது. அதே போல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளிலும் சமூக கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
கொரோனா பரவ பரவ அது புதிய வகையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அது வைரசின் இயல்பானது ஆகும். பரவலை தடுப்பது மட்டுமே புதிய வகையை உருவாக்குவதை தடுக்கும்.
இதற்கு தடுப்பூசி போட்டு கொண்டால்தான் தீர்வு. அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்ள தாமதம் செய்வதும் கூட வைரசின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் உலக சுகாதார அமைப்பின் ரஷியாவுக்கான பிரதிநிதி மெலிடா வுஜ்னோலிக் கூறும்போது டெல்டா வகை கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொண்டது, முகக்கவசம் அணிவது அவசியம்.
குறிப்பிட்ட காலத்துக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும் என்றார்.