நாசா இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்ட வைரலான புகைப்படங்கள்
பிரபல விண்வெளி மையமான நாசா தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட நிழற்படங்களை பதிவிட்டு வருகிறது. இவை சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரை கவர்ந்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த 10ஆம் தேதி நாசா துருக்கி தொடர்பாக ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தது.
அந்தப் பதிவில் துருக்கியின் அழகிய நகரமான இஸ்தான்புல் இரவு நேரத்தில் இருப்பதை சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுத்த நிழற்படத்தை பதிவிட்டது.
அந்தப் பதிவில்,"ஹே இஸ்தான்புல், நீ அழகாக ஒலிற்கிறாய்! இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் மின்னும் துருக்கியின் நகரம். இது போசோபோரஸ் ஜலசந்தி மற்றும் தங்க கொம்பு இடையில் இருக்கும் அழகிய நகரம்.
இந்த நிழற்படம் 10-ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்டது. விண்வெளி மையம் கருங்கடலில் இருந்து 263 மையில்கள் தொலைவில் விண்ணில் நிலை கொண்டுள்ளது. நாசா விண்வெளி வீரர்கள் எடுக்கும் நிழற்படங்களை நாங்கள் ஆராய்ச்சிக்காக பயன்படுத்துவோம்.
அதில் தற்போது மனிதர்களின் செயல்களால் எவ்வாறு பூமியின் இடங்கள் மாறுகிறது என்பது தெளிவாக தெரியும். குறிப்பாக நகர்புறங்களில் ஏற்படும் மாற்றங்களை இந்தப் படங்களை வைத்து கண்டறிய முடியும்" எனப் பதிவிட்டுள்ளது.
இந்த நிழற்படம் சமூக வலைத்தளங்களில் பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முன்பாகவும் நாசா துருக்கி நாடு தொடர்பாக அங்கு உள்ள ஏரி ஒன்று குறித்து ஒரு பதிவை செய்திருந்தது. அது இந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. எனினும் தற்போதைய நிழற்படம் பெரும் கவனம் பெற்றுள்ளது.
துருக்கி நாட்டிற்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது ஆசிய மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள ஒரு நாடு. துருக்கியின் ஆசிய மற்றும் ஐரோப்பிய பகுதியை போசோபோரஸ் ஜலசந்தி பிரிக்கிறது.
இது குறிப்பாக இஸ்தான்புல் நகரை இரண்டாக பிரிக்கிறது. ஒரு புறம் ஆசியாவிலும் மற்றொரு புறம் ஐரோப்பியா பகுதியிலும் உள்ளது. இந்த இடத்தைத்தான் நாசா நிழற்படம் இரவு நேரத்தில் புகைப்படம் எடுத்து காட்டியுள்ளது.