சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரி கத்திக்குத்து: 7 பேர் மரணம்!

Shankar
Report this article
சீனாவில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி 7 பேர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரின் புறநகர் பகுதியான காய்டியான் என்ற இடத்தில் நேற்று முன்தினம் (24) ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கையில் கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
கத்திக்குத்து சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம நபர் அவர்களை விரட்டி சென்று கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இதனிடையே இந்த கத்திக்குத்து தாக்குதல் குறித்து தகவல் அறிந்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொலிஸாரை பார்த்ததும் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்த ஒரு பாலத்தின் மீது ஏறி ஆற்றில் குதித்து தப்பினார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலின் பின்னணி குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் தப்பியோடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.