ICC தலைமை சட்டத்தரணிக்கு நெருக்கடி ; கரீம் கான் பதவி குறித்து தீர்மானிக்கும் வாக்கெடுப்பு
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை சட்டத்தரணி கரீம் கானை பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்குவது தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு இன்று (24) நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
பிரிட்டிஷ் சட்டத்தரணியான கரீம் கான், தனது பெண் உதவியாளரிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) வெளியிட்ட அறிக்கைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், தமக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாடுகளை கரீம் கான் முழுமையாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக, நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கரீம் கான் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் பங்கேற்கும் இந்த வாக்கெடுப்பு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இடம்பெறாத முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கரீம் கான் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விவாதங்களை முன்னெடுத்து, அவர் தொடர்ந்தும் தலைமை சட்டத்தரணி பதவியில் நீடிக்க வேண்டுமா அல்லது பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட வேண்டுமா என்பது குறித்து உலக நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்து தீர்மானிக்கவுள்ளனர்.
இந்த வாக்கெடுப்பின் முடிவு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை தொடர்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.