ஆம்புலன்ஸ் சேவைக்காக பல மணி நேரம் காத்துக் கிடந்து... கனேடியர் பட்ட அவஸ்தை
நோவா ஸ்கோடியாவில் ஆம்புலன்ஸ் சேவைக்காக பல மணி நேரம் காத்துக்கிடந்து, பின்னர் மருத்துவமனையிலேயே மரணமடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் முதியவர் ஒருவர்.
நோவா ஸ்கோடியாவின் டார்ட்மவுத் பகுதியில் வசித்து வரும் 86 வயதான Ross O'Brien என்பவரே மருத்துவமனையில் பரிதாபமாக மரணமடைந்தவர். கடந்த ஆகஸ்ட் மாதம் தமது குடியிருப்புக்கு அருகே Ross O'Brien தடுமாறி விழுந்துள்ளார்.
இடுப்பில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சிய அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளித்துள்ளனர். பல மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் சேவை அவருக்கு கிடைக்கவில்லை. மட்டுமின்றி தமது குடியிருப்புக்கும் 170 கி.மீ தொலைவில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிசாரின் உதவியுடன் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் O'Brien சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு இடுப்பு காயத்திற்கான அறுவை சிகிச்சையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல் ரீதியான சிக்கல்களால் அவரால் மருத்துவமனையில் இருந்து வெளியேற முடியவில்லை என்பது மட்டுமல்ல, சம்பவம் நடந்த சில வாரங்களுக்கு பின்னர் O'Brien மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.
மூன்று மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இக்கட்டான சூழலில் இருந்து அவரால் மீண்டுவர முடியவில்லை என்றே குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
நோவா ஸ்கோடியாவில் ஆம்புலன்ஸ் சேவை பற்றாக்குறையால் இதுபோன்று பல உயிர்கள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்த நிலையில் மாகாணத்தின் முதல்வர் O'Brien குடும்பத்திற்கு தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளார்,
மேலும் ஆம்புலன்ஸ் சேவை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.