பிரித்தானியாவில் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள்; போரிஸ் ஜான்சன் விடுத்துள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவை புயல் ஒன்று தாக்கியுள்ளதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
Christoph என்று பெயரிடப்பட்ட புயல் ஒன்று பிரித்தானியாவை தாக்கியதைத் தொடர்ந்து கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியிலுள்ள சுமார் 2,000 வீடுகளில் வசிக்கும் பிரித்தானியர்கள் நேற்றிரவு வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
பனியும் மழையும் கொட்டித்தீர்த்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் கிரேட்டர் மான்செஸ்டர், நார்த்தம்பர்லாண்ட் மற்றும் யார்க்ஷையர் ஆகிய பகுதிகளிலுள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இந்நிலையில் சுற்றுச்சூழல் ஏஜன்சி இங்கிலாந்திலுள்ள 130 இடங்களுக்கு பெருவெள்ள எச்சரிக்கையும், 225 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு பெய்யவேண்டிய மழை, 36 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிக்காக இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த வாரம் மேலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களுக்கு உதவ தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.




