ஐ.நா.மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்; ஈரான் வெளியுறவு அமைச்சர்
ஐ.நா.மீதான நம்பிக்கை தகர்ந்துவிட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்தடைந்த உயர்மட்ட இராஜதந்திரி, தனது டெலிகிராம் சேனல் வாயிலாக இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, "அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியால் எங்கள் மீது தொடுக்கப்பட்ட கோழைத்தனமான போர், அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் மற்றும் நடைமுறையில் போர்ச் சூழலாகவே நீடிக்கும் ஒரு நிலையில்தான் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது
இயல்பாகவே, ஈரானிய மக்களின் நியாயத்தன்மை, உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு முக்கிய சர்வதேச மேடையைப் பயன்படுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டத் தவறியதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபை தனது நம்பகத்தன்மையையும் நம்பிக்கையையும் இழந்துவிட்டதாக அராக்சி கூறினார்.
'நம்பிக்கையை மீட்டெடுத்தல்' (restoring trust) என்ற கருப்பொருளுடன் செவ்வாய்க்கிழமை அன்று ஐ.நா. பொதுச் சபை கூடவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்
. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைத் திறம்படப் பராமரிக்கத் தவறியதால், இந்த அமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது அல்லது முற்றிலுமாக மறைந்துவிட்டது என்பதை இது உலகளாவிய ரீதியில் ஒப்புக்கொள்வதையே பிரதிபலிக்கிறது என்று அராக்சி கூறினார்.
சில நாடுகள் சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச சட்டம் மற்றும் மனிதகுலத்தின் கூட்டு மனசாட்சி ஆகியவற்றைக்கூடப் புறக்கணித்து, எவ்விதத் தண்டனைக்கும் அஞ்சாமல் செயல்படும் உரிமையைத் தாங்களே எடுத்துக்கொள்கின்றன.
மேலும் தமக்கும் தங்கள் கூட்டாளிகளுக்கும் சட்டப் பாதுகாப்பையோ அல்லது விலக்களிப்பையோ (immunity) கோருகின்றன. இதன் விளைவாக, சியோனிச ஆட்சி போன்ற ஒரு குற்றவியல் அமைப்பு தான் விரும்பும் எத்தகைய செயல்களையும் செய்வதற்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுவதைக் காண்கிறோம்.
அதேவேளையில், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டத்தின் காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் மௌனம் காக்கின்றன எனவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி கூறினார்.