குறிவைத்து அடிக்கும் உத்தியை ஆராய்ந்து வைத்துள்ளோம்; அர்ஜென்ட்டினா
கத்தார் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இறுதியாட்டத்திற்குச் செல்லும் இலக்கோடு அர்ஜென்ட்டினாவும் குரோஷியாவும் நேருக்குநேர் மோதவிருக்கின்றன.
அந்த அரையிறுதி ஆட்டம் நாளை அதிகாலை (டிசம்பர் 14) 3 மணிக்கு நடைபெறும். இந்நிலையில் ஆட்டத்தில் குரோஷியாவின் வேகத்தை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்ற உத்தியைத் தாமும் சக பயிற்றுவிப்பாளர்களும் ஆராய்ந்து வைத்திருப்பதாகக் அர்ஜென்ட்டினா அணித் தலைமைப் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி (Lionel Scaloni) கூறுகின்றார் .
செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய லயனல் ஸ்கலோனி (Lionel Scaloni), "குரோஷியா பல தேசிய அணிகளுக்குக் கடும் சவால் கொடுத்துள்ளது. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்கள், பலம், பலவீனங்கள் பற்றி நான் பேசமாட்டேன்.
ஆனால் அந்த அணியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்ற உத்தியை நாங்கள் ஆராய்ந்து வைத்துள்ளோம். அந்த உத்தி சில நேரங்களில் பலனளிக்கலாம், பலனளிக்காமலும் போகலாம் என்றார்.
அதோடு "ஆட்டத்தின்போது திடலில் இயன்றவரை உழைப்பைப் போடுகிறோம். சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது இலக்கை அடைவது சுலபமாகின்றது.
ஆனால் இது காற்பந்து. சில நேரங்களில் சிறந்த அணிகூட வெற்றிபெறாமல் போகலாம் என்றும் லயனல் ஸ்கலோனி (Lionel Scaloni) கூறினார்.
மேலும் அர்ஜென்ட்டினா அணிக்குத் தனிப்பட்ட பாணி உண்டு என்றாலும் சில சமயங்களில் எதிரணி எப்படி விளையாடுகிறது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டியிப்பதாகவும் லயனல் ஸ்கலோனி (Lionel Scaloni) தெரிவித்தார்.