ஒன்டாரியோவில் படகு விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
ஒன்டாரியோ மாகாணத்தின் அடிங்க்டன் ஹைலேண்ட்ஸ் பகுதியில் உள்ள வெஸ்லெம்கூன் ஏரியில் நிகழ்ந்த படகு விபத்தில் 22 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, கடல் மற்றும் நீர்நிலைகளில் நடைபெறும் பல்வேறு விபத்துகள் குறித்து மாகாண பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சனிக்கிழமை காலை 7:45 மணியளவில், பென்க்ராஃப்டிலிருந்து கிழக்காக 40 கி.மீ. தொலைவில் உள்ள வெஸ்லெம்கூன் ஏரியில் ஒருவர் நீரில் விழுந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண போலீசாருக்கு (OPP) அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள்
இந்த அழைப்பின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் பல்வேறு வழிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
சனிக்கிழமை இரவு 8 மணியளவில், டொரொன்டோவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் 21 வயதான படகோட்டி ஒருவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மது அருந்தி அசமந்தப் போக்கில் படகை செலுத்தியதாக குறித்த இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீரில் பயணிக்கும் போதும், நீர் நிலைகளுக்குச் செல்லும் போதும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, இந்த வார இறுதியில் மாகாணம் முழுவதும் நடந்த நீர்நிலைகள்சார்ந்த அதிக எண்ணிக்கையிலான விபத்துகளுக்குப் பின்னர் வழங்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.