உல்லாசக் கப்பலில் சென்ற யுவதிக்கு நேர்ந்த நிலை!
அவுஸ்திரேலிய கடற்பரப்பில் உல்லாசக் கப்பலொன்றிலிருந்து வீழ்ந்த யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பசுபிக் எக்ஸ்புளோரர் (Pacific Explorer) எனும் உல்லாசக் கப்பலில் அவுஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது நேற்றிரவு பெண்ணொருவர் கடலில் வீழ்ந்தார்.
அவரைக் கண்டுபிடிப்பதற்கு பாரிய தேடுதல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில், இன்று காலை ஹெலிகொப்டர் ஒன்றின் மூலம் அப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
23 வயதான யுவதியொருரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்பெண்ணை கண்டுபிடிப்பதற்கு விமானமொன்றும் 2 ஹெலிகொப்டர்களும் இரவு முழுவதும் தேடுதலில் ஈடுபட்டதாகவும், ஜெவ்வா முனைக் கரையிலிருந்து 45 கிலோமீற்றர் தூரத்தில் இன்று காலை 7 மணியளவில் இப்பெண்ணின் சடலம் ஹெலிகொப்டர் ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டடதாகவும், அவுஸ்திரேலிய கடல்பாதுகாப்பு அதிகாரி சபை தெரிவித்துள்ளது.
தனது குடும்ப அங்கத்தவர் ஒருவருடன் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவர் செவ்வாய் இரவு 11.30 மணியளவில் கடலில் வீழ்ந்தார் என கார்னிவேல் ஒஸ்ட்ரேலியா எனும் கப்பல் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.
இக்கப்பல் மெல்பேர்ன் நகரிலிருந்து கங்காரு தீவை நோக்கி சென்றுகொண்டிருந்தது. மேற்படி சம்பவத்தையடுத்து அக்கப்பல் மீண்டும் மெல்பேர்ன் நோக்கி திரும்பியது.