போர் நிலவரம் குறித்து வெள்ளை மாளிகை சற்று முன்னர் விடுத்த அறிவித்தல்
ஈரான் மீதான போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதியின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் விளக்கமளித்துள்ளார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இந்த போரின் ஆரம்பக்கட்ட காலக்கெடு மற்றும் இலக்குகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த இராணுவ நடவடிக்கையின் தொடக்கக் காலக்கெடு நான்கு முதல் ஆறு வாரங்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த காலத்திற்குள் ஈரானின் ஏவுகணைகளை அழித்தல், ஈரான் கடற்படையை செயலிழக்கச் செய்தல், அணுசக்தி திறன்களை முழுமையாக ஒழித்தல் மற்றும் ஈரானின் ஆதரவுப் படைகளை (Proxies) முற்றிலுமாக அழித்தல் உள்ளிட்ட இலக்குகளை அடைய திட்டமிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
திட்டமிட்ட காலக்கெடுவை விட இந்த நடவடிக்கை அதிவேகமாக முன்னேறி வருவதாக லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாகக் கடந்த திங்கட்கிழமை டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டிருந்த கருத்துக்களை அவரும் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்துப் பேசிய அவர், "ஈரான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், அந்த நாடு முழுமையாகவும் நிபந்தனையற்ற முறையிலும் சரணடையும் வரை இந்தப் போர் முடிவுக்கு வராது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஈரான் இனி நேரடி அச்சுறுத்தலாக இருக்காது என்பதை ட்ரம்ப் மட்டுமே தீர்மானிப்பார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.