வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு ; படுகாயம் அடைந்த பெண் பாதுகாவலர் பலி
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பாதுகாவலர்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இந்தத் தாக்குதலில் மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்த சாரா பெக்ஸ்ட்ரோம் மற்றும் ஆண்ட்ரூ வோல்ஃப் ஆகிய இரண்டு பாதுகாவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாரா பெக்ஸ்ட்ரோம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘நமது நாட்டுக்காகப் பணியாற்றிய வீராங்கனையை நாம் இழந்துவிட்டோம்’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், காயமடைந்த மற்றொரு வீரரான ஆண்ட்ரூ வோல்ஃப் தொடர்ந்து உயிருக்குப் போராடி வருகிறார்.
இந்தக் கொடூர தாக்குதலை நடத்தியவர் ரஹ்மானுல்லா லகன்வால் (29) என்ற ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அகதியாக வந்த இவர், மறைந்திருந்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியுள்ளார்.