அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ ; வீடுகளை இழந்த அமெரிக்க பிரபலங்கள்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதியில் வசிக்கும் பல பிரபலங்களின் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
நியூயோர்க் நகரத்தினை அடுத்து, அமெரிக்காவின் இரண்டாவது பிரபல நகரமான லொஸ் ஏஞ்சல்ஸ், பிரபலங்கள் வாழும் நகரமாகவும் உள்ளது.
உலகின் பிரபலமான ஹொலிவுட் சின்னம், பாரமவுண்ட் பிக்சர்ஸ், யுனிவர்சல் மற்றும் வோர்னர் பிரதர்ஸ் போன்ற ஸ்டுடியோக்கள் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ளன.
இந்நிலையில், குறித்த நகரில் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீயால் பல பிரபலங்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர். கிரேஸி ஹார்ட் திரைப்படத்தின் கதாநாயகனான ஜெஃப் பிரிட்ஜஸ் தனது பூர்வீக வீட்டை இழந்துள்ளார்.
சைலன்ஸ் ஒப் த லேம்ப்ஸ் திரைப்படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கொலையாளியாக நடித்த ஒஸ்கார் விருது வென்ற நடிகரான அந்தோனி ஹோப்கின்ஸ் தனது வீட்டை இழந்துள்ளார்.
மேலும், தொலைக்காட்சி நட்சத்திரமான பரிஸ் ஹில்டன் மலிபு பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டின் சேதமடைந்த இடிபாடுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன், பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகையான ஜூலியா லூயிஸ்-ட்ரேஃபஸ் தனது வீட்டை பறிகொடுத்துள்ளார்.
இதேவேளை, ப்ரேவ் ஹார்ட் மற்றும் மேட் மெக்ஸ் ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மெல் கிப்சன் பிரபல தொகுப்பாளர் ஜோ ரோகனின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போது அவரின் வீடு தீக்கிரையாகியுள்ளது.
மேலும், ஒஸ்கார் விருது வென்ற நடிகரான பில்லி கிரிஸ்டலின்வீடு தீக்கிரையாகியுள்ளதை மிகுந்த மனவேதனையுடன் அவர் பகிர்ந்துள்ளார்.