காசா போர் முடிவுக்கு வருமா? நெதன்யாகு டிரம்புடன் பேச்சுவார்த்தை
காசா இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர 4-வது முறையாக நெதன்யாகு அமெரிக்காவுக்கு சென்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்
காசா மீது ஒன்றரை ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கா சென்றார். அப்போது, வெள்ளை மாளிகையின் வாசலுக்கு வந்த டிரம்ப், காரில் இருந்து வெளியே வந்த நெதன்யாகுவை கைகுலுக்கி வரவேற்றார்.
நடப்பு ஆண்டில் 4-வது முறையாக நெதன்யாகு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவர், டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் காசா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் சார்பில் தீவிர அழுத்தம் தரப்பட்டது.
இதனால் காசா போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
எனினும், காசா மற்றும் மேற்கு கரை பகுதியை தன்வசம் எடுத்து கொள்ளும் முடிவில் நெதன்யாகு இருக்கிறார் என கூறப்படுகிறது.
காசாவை வருங்காலத்தில் யார் நிர்வகிப்பது? என்பது பற்றியும் இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காசா விவகாரத்தில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறேன் என செய்தியாளர்களிடம் பேசும்போது டிரம்ப் கூறினார்.