கைப்பையை சுத்தம் செய்த பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்
கனடாவில் தனது கைப்பையை சுத்தம் செய்தபோது, கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு முன்பு வாங்கிய லாட்டோ 6/49 சீட்டு ஒன்றைக் கண்டுபிடித்த பெண் ஒருவர், அதன்மூலம் பெரும் பரிசுத் தொகையை வென்றுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா லாட்டரி கார்ப்பரேஷன் (BCLC) வெளியிட்ட தகவலின்படி, ஆல்பெர்டினா கே. என்பவர் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் “திடீர் எண்ணத்தில்” அந்த லாட்டோ சீட்டை வாங்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக கைப்பையிலேயே இருந்த அந்த சீட்டை கண்டுபிடித்த அவர், தனது மகளிடம் மொபைல் செயலியை பயன்படுத்தி அதை ஸ்கேன் செய்யுமாறு கேட்டுள்ளார்.

அப்போது, லாட்டோ 6/49 சீட்டில் உள்ள 6 எண்களில் 5 எண்கள் சரியாக பொருந்தியுள்ளதை உறுதிப்படுத்திய செயலி, அவருக்கு 245,448.80 டொலர் பரிசு கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதனை நம்பவே முடியவில்லை என வெற்றி பெற்ற தருணத்தை ஆல்பெர்டினா நினைவுகூர்ந்துள்ளார்.
பரிசு வென்றதை அறிந்த உடனேயே, குடும்பத்தினருடன் உணவுக்குச் சென்று மகிழ்ச்சியை பகிர்ந்ததாகவும், ஆனால் அந்தத் தொகையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது என் வாழ்க்கையை சிறிதளவு மாற்றக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.