30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை தொடர்பில் கனடியருக்கு தண்டனை
கனடாவின் வின்னிபெக் நகரைச் சேர்ந்த ராபர்ட் ஆலன் கிரெட்டர், சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நியூ ஜெர்சியில் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதை அடுத்து, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் ஆலன் கிரெட்டர், 1997ஆம் ஆண்டு தாமரா (டம்மி) டிக்னர் என்ற பெண்ணின் மரணத்திற்கு காரணமான முதல் நிலை மோசமான மனிதக் கொலைக்காக இந்த ஆண்டு ஆரம்பத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவரது உடல் வாஷிங்டன் பூங்கா ஒன்றுக்கு அருகே ஒரு மண் பாதையில் கண்டெடுக்கப்பட்டது.
வழக்கறிஞர்கள், குற்ற ஒப்புதலுக்கு ஈடாக 10 ஆண்டு சிறை தண்டனையை ஒப்புக்கொண்டனர், இதில் 85 சதவீதம் பரோல் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோமர்செட் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகம், கடந்த வாரம் அவர் முறையாக தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு, இந்த பழைய வழக்கில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டது. ஆதாரங்கள் மீண்டும் டி.என்.ஏ பரிசோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, அவை கிரெட்டருடன் தொடர்புபட்டவை என்பது நிரூபணமானது.
அவர் 2002ஆம் ஆண்டு வின்னிபெக்கிற்கு குடிபெயர்ந்திருந்தார்.
வழக்கறிஞர் அலுவலகத்தின் சமூக ஊடக பதிவு ஒன்றில், 2024ஆம் ஆண்டு வின்னிபெக்கில் கிரெட்டர் கைது செய்யப்பட்டபோது, “கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்த நாள் நடக்கும் என்று நான் பயங்கரமான கனவுகளை கண்டிருக்கிறேன்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.