கணவனால் கொடூரத்தின் உச்சத்தை அனுபவித்த பெண்: போராடி மீட்ட பொலிசார்
பிரித்தானியாவில் கணவனால் கொடூரமாக தாக்கப்பட்டு, உரிய நேரத்தில் பொலிசாரால் மீட்கப்பட்ட பெண் தொடர்பில் நடுங்கவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
கடந்த 2020 மே மாதம், வீட்டைவிட்டு வெளியேற இருப்பதாக தமது கணவரிடம் தெரிவித்துள்ளார் 54 வயதான மார்டினா டர்னர். இதில் கோபமடைந்த ஸ்டீவன் வூட், சமையலறை கத்தியால் கண்மூடித்தனமாக மார்டினாவை தாக்கியுள்ளார்.
அந்த கத்தி இரண்டாக உடைந்த நிலையில், இன்னொரு கத்தியால் மீண்டும் கொடூரமாக தாக்கியுள்ளார். அந்த கத்தி மார்டினாவின் மார்பில் சிக்கிக்கொள்ள, அதன் பின்னரே அவர் தாக்குதலை நிறுத்தியுள்ளார்.
மட்டுமின்றி, உன்னை சிறை வைப்பது எனது நோக்கமல்ல, கொன்று விடுவது தான் முறை எனவும் ஆக்ரோஷமாக கத்தியுள்ளார். இதனையடுத்து மார்டினாவை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, காரில் வெளியே சென்ற வூட், ரெட்ஹெக் பாலத்தில் இருந்து டைன் நதியில் குதித்துள்ளார்.
இருப்பினும், சமயோசிதமாக செயல்பட்டு பொலிசார் அவரை மீட்டனர். இதனிடையே குற்றுயிராக கிண்டந்த மார்டினா, 999 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உதவி கோரியுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் சம்பவயிடத்தில் பொலிசார், மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் என ஒரு படையே திரண்டு வந்தது. இதனையடுத்து, பூட்டப்பட்டிருந்த வீட்டின் உள்ளே அதிரடியாக நுழைந்த பொலிசார், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மார்டினாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, இந்த வழக்கில் நியூகேஸில் கிரவுன் நீதிமன்றம் வூடுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. மட்டுமின்றி 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பின்னர் தான் பிணை தொடர்பில் விண்ணப்பிக்கவும் நிபந்தனை வைத்துள்ளது.
இதனிடையே, தீவிர சிகிச்சைக்கு பின்னர் உயிர் தப்பிய மார்டினா, தற்போது கணவனால் துன்புறுத்தலை எதிர்கொள்ளும் பெண்களுக்காக போராடி வருகிறார்.