COP31 மாநாட்டில் கடல்களுக்குக் குரல் கொடுத்த சாதனை வீராங்கனை
துருக்கியின் அண்டாலியா நகரில் நடைபெற்றுவரும் COP31 காலநிலை மாநாட்டில், துருக்கியின் உலக சாதனை ப்ரீடைவிங் (freediving) வீராங்கணையான ஷாஹிகா எர்சுமென் (Şahika Ercümen), கடல் மாசுபாடுகள் குறித்தும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த தண்ணீருக்கு அடியில் மூச்சடக்கிக் காட்டியுள்ளார்.
இந்த மாநாட்டின் நீல மண்டலத்தில் (Blue Zone) அமைக்கப்பட்டுள்ள நீர்த் தொட்டிக்குள் இறங்கிய அவர், வார்த்தைகளால் விவரிக்க முடியாத சுற்றுச்சூழல் செய்தியைச் செயலின் மூலம் வெளிப்படுத்தும் வகையில் கடல்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நீருக்கடியில் உயிர்வாழ்வதற்கான வக்கீலாகவும், பூஜ்ஜியக் கழிவு (zero waste) தூதராகவும் பணியாற்றும் எர்சுமென், "கடல்களும் சுவாசிக்க வேண்டும் என்ற செய்தியை வழங்குவதற்காகவே நாங்கள் மூச்சடக்கினோம்" என்று தெரிவித்தார்.
அத்துடன், முந்தைய காலநிலை மாநாடுகளில் எடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், அவை நடைமுறைப்படுத்தப்பட்டு உறுதியான நடவடிக்கைகளாக மாற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கடல் மேற்பரப்பில் தெரியும் குப்பைகளைக் காட்டிலும், கடல் படுகைகளில் அதிக அளவிலான கழிவுகள் தேங்கிக் கிடப்பதாகத் தனது முந்தைய டைவிங் அனுபவங்களை மேற்கோள் காட்டி அவர் எச்சரித்தார்.
இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது எனவும், நமது அன்றாடப் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதோடு அரசாங்கங்களையும் பொறுப்புடன் செயல்பட வைக்க வேண்டும் எனவும் எர்சுமென் கேட்டுக்கொண்டார்.