யுக்ரைனின் பொருளாதாரம் குறித்து உலகவங்கி விடுத்த எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்ய முன்னெடுத்துள்ள ஆக்கிரமிப்பு போரினால் யுக்ரைனின் பொருளாதாரம் இந்த வருடத்தில் 45 சதவீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட தாக்கத்தை காட்டிலும் அதிகம் எனவும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய மற்றும் யுக்ரைனுக்கு இடையிலான போர் காரணமாக, யுக்ரைனின் பிரதான கோதுமை ஏற்றுமதி உள்ளிட்ட பல துறைகளில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதன் ஏற்றுமதி நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், போர் காரணமாக உக்ரைனின் பணியாளர்களில் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன், பாதுகாப்பு படையிலும் இணைந்துள்ளதனால் அங்கு வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான காரணிகளால் உக்ரைன் பொருளாதாரம் 45 சதவீதத்தினால் வீழ்ச்சியடையும் என உலகவங்கி மதிப்பிட்டுள்ளது.
அதேசமயம் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைக்காரணமாக ரஷ்ய பொருளாதாரம் 11 சதவீதம் வரையில் இந்த வருடத்தில் வீழ்ச்சியடையும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.