இறுதிக் கட்டத்தை எட்டும் உலகக் கோப்பை கால்பந்து; வெல்லப்போவது யார்?
உலகக் கோப்பை கால்பந்து தொடரில், நாளை (14.12.22) நள்ளிரவு நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா, குரேஷியாவை எதிர்கொள்கிறது.
சாம்பியன் பட்டம் வெல்லும் கனவை நனவாக்க இரு அணிகளும் முழு முனைப்புடன் களமிறங்க உள்ளன. இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான அர்ஜென்டினா, குரேஷிய அணியை சந்திக்கிறது.
இதன்போது லீக் சுற்றில், மொராக்கோ மற்றும் பெல்ஜியம் அணிகளுடன் குரேஷியா மோதிய போட்டிகள் கோலின்றி சமனில் முடிந்தன. மற்றொரு போட்டியில் 4-க்கு 1 என்ற கோல் கணக்கில், கனடாவை வீழ்த்தியது. இரண்டாவது சுற்றில் ஜப்பானையும், காலிறுதியில் ஐந்து முறை சாம்பியனான பிரேசிலையும் பெனால்ட் ஷூட் அவுட் முறையில் தோற்கடித்து குரேஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது.
தொடர்ச்சியாக இரண்டாவது முறை அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் குரேஷிய அணி, இம்முறை எப்படியாவது பட்டம் வென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
முந்தைய உலகக் கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் தொடரில் குரேஷிய அணி நாக் அவுட் சுற்றுகளில் ஆறு போட்டிகளில் ஐந்தில் முதலில் பின்தங்கிய நிலையில் இருந்து, பின்னர் முன்னேறி வெற்றியை வசப்படுத்தி உள்ளது. 2018 உலகக் கோப்பையில் பிரான்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அடைந்த தோல்வி மட்டுமே குரேஷியாவின் சாதனைகளில் களங்கமாக உள்ளது.
அர்ஜென்டினா அணியைப் பொறுத்தமட்டில், லீக் சுற்று முதல் ஆட்டத்தில் சௌதி அரேபியாவிடம் அடைந்த தோல்வி, உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் மிக மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனாலும், பீனிக்ஸ் பறவை போல மீண்டுடெழுந்த அர்ஜென்டினா, மெக்சிகோ, போலந்து அணிகளை வீழ்த்தியது.
இரண்டாவது சுற்றில் ஆஸ்திரேலியாவை வென்று, காலிறுதியில் பெனால்டி ஷூட்டில் நெதர்லாந்தையும் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. குரேஷியா கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி, இரண்டில் டிரா கண்டுள்ளது. அர்ஜென்டினா கடைசியாக பங்கேற்ற 5 போட்டிகளில் ஒன்றில் தோல்வியும் நான்கில் வெற்றியும் கண்டிருக்கிறது.
குரேஷிய அணி உலகக் கோப்பை பெனால்டி ஷுட் அவுட்டுகளில் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் கடைசி ஆறு நாக் அவுட் சுற்றுப் போட்டிகள் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றன. அர்ஜென்டினா அணி 1930, 1986, 1990 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் அரையிறுதிப் போட்டிகளிலிருந்து முன்னேறி இறுதி வரை சென்றுள்ளது.
லயோனல் மெஸ்ஸியின் ஆதிக்கம் போட்டிக்குப் போட்டி அதிகரித்து வருவது அர்ஜென்டினாவுக்கு பெரிய பலமாகும். அதிக உந்துதல் கொண்ட மெஸ்ஸி தலைமையிலான அணியின் கையே இன்றைய அரையிறுதிப் போட்டியில் சற்று ஓங்கியிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.