உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு ; தோண்ட தோண்ட கிடைக்கும் தங்கம்
நவீனக் காலத்தில் தங்கத்தின் மீதான முதலீட்டை உலக நாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைகளில் ஒரு மிகப் பெரிய வளம் நிறைந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது ஒட்டுமொத்த தென் அமெரிக்காவின் சுரங்கத் தொழிலை மொத்தமாக மாற்ற வாய்ப்பு இருக்கிறது. அர்ஜென்டினாவின் சான் ஜுவான் மாகாணத்திற்கும், சிலி நாட்டின் அட்டகாமா என்ற பிராந்தியத்திற்கும் இடையிலான எல்லையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி படிவுகளில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
விகுனா கனிமப் படுகை (Vicuña Mineral Resource) என்று அழைக்கப்படும் இந்தத் தளத்தை லுண்டின் சுரங்கம் (Lundin Mining) மற்றும் பிஹெச்பி (BHP) நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகிறது.
இந்த இடத்தில் சுமார் 13 மில்லியன் டன் செம்பு (காப்பர்), 32 மில்லியன் அவுன்ஸ் தங்கம் மற்றும் 659 மில்லியன் அவுன்ஸ் வெள்ளி ஆகியவை இருக்கும் என ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். அதன்படி பார்த்தால் இது உலகளவில் மிகப் பெரிய செம்பு, தங்கம் மற்றும் வெள்ளி படிவுகளில் ஒன்றாக இருக்கும்.
இங்கு இரு முக்கிய செக்ஷன்கள் உள்ளன. அதில் ஃபிலோ டெல் சோல் (Filo del Sol) 1.14 சதவீதத்தில் 600 மில்லியன் டன்களுக்கு மேல் செம்பு தாது உள்ளது. அடுத்து ஜோஸ்மரியா (Josemaria) இங்கு 0.73 சதவீதத்தில் சுமார் 200 மில்லியன் டன்களுக்கு மேல் செம்பு தாது இருக்கிறது.
சரியான முறையில் வெட்டி எடுக்கும் பணிகள் நடந்தால் அடுத்துப் பல ஆண்டுகளுக்கு இது சர்வதேச அளவில் இது முக்கியமான சுரங்கமாக இருக்கும் இது குறித்து லுண்டின் சுரங்க நிறுவனத்தின் சிஇஓ ஜேக் லுண்டின் கூறுகையில்,
"விகுனா கனிமப் படுகை ஒரு முக்கியமான செம்பு சுரங்கமாக மட்டுமின்றி.. உலகின் மிகப்பெரிய தங்கம் மற்றும் வெள்ளி சுரங்கங்களில் ஒன்றாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது" என்றார்.