இது வேற லெவல் ; 70 ஆண்டுகளுக்கு பின் ரீயூனியனில் மலர்ந்த காதல்! எப்படி தெரியுமா?
கனடாவில் 1950 ஆம் ஆண்டு காதலித்த காதல் ஜோடி ஒன்று 70 ஆண்டுகளுக்கு பின் ரீயூனியனில் மீண்டும் சந்தித்த போது, தங்கள் காதலை புதுப்பித்துக் கொண்டதுடன் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள ஆச்சர்ர்ய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஆதி முதற்கொண்டு இன்றுவரை காதல் கதைகள் பல கோடி; அது கோழையை வீரனாக்கும். வீராதி வீரனை பசுவைப் போல் சாதுவாக்கும். ஆண்டியை அரசனாக்கும், அரசனை அடிமையாக்கும். காதலால் வாழ்வில் ஏற்றங்களும் ஏற்படலாம்.
ஏமாற்றங்களும் ஏற்படலாம். எனினும் காதல் அற்புதமானது. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால் இந்த ஜோடிக்கு 70 ஆண்டுகளுக்கு பின், அது வாய்த்திருக்கிறது. வியக்க வைக்கும் இந்த காதல் கதை கனடாவில் நடந்திருக்கிறது. பிரடெரிக் பால் மற்றும் புளோரன்ஸ் ஹார்வி இருவரும் கடந்த 1950 ஆம் ஆண்டு பள்ளியில் படித்த போது, காதலில் விழுந்திருக்கிறார்கள். 5 ஆண்டுகளில் இவர்களில் காதலில் இடைவெளி விழுந்திருக்கிறது.
பள்ளி வாழ்க்கைக்குப்பின், வேலைக்காக பிரடெரிக் டொராண்டோ சென்றிருக்கிறார். இப்போது இருப்பது போல், அக்காலத்தில் தொலைதொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தால், அவர்கள் காதலில் விரிசல் விழுந்து, இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்திருக்கிறார்கள். 84 வயதில் பிரடெரிக் தனது மனைவியை இழக்க, ஹார்வியின் 81 வயதில் அவரது கணவர் காலமானார்.
இந்நிலையில், 65 ஆண்டுகளுக்கு பின், பள்ளியின் ரீயூனியனுக்காக இருவரும் மீண்டும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு மகிழ்ச்சியை தர, பின் மீண்டும் இருவரும் பேச துவங்கியிருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் தங்களது காதலை புதுப்பித்துக்கொள்ள, கொரோனா காலத்தில் திருமணத்தில் முடிந்திருக்கிறது.
கொரோனா ஊரடங்கின் போது கடந்த 2020 ஆகஸ்ட் 8 ஆம் தேதி இருவரும் எளிமையாக திருமணம் செய்திருக்கிறார்கள். இப்போது இந்த விஷயம் வெளி உலகுக்கு தெரிய பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
இதுகுறித்து பிரடெரிக் கூறுகையில், ‘புளோரன்ஸ் ஒரு தேவதை. எனக்காக சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்து தேவதை அவள்’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.