மோடி, ட்ரம்ப் நேரில் சந்திப்பதை விரைவில் பார்ப்பீர்கள் ; அமெரிக்காவிலிருந்து வந்த தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் விரைவில் நேரில் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க உள்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியதாவது, ”மோடி மற்றும் ட்ரம்ப் இருவரும் நேரில் சந்திப்பதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் நேர்மறையான உறவைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவுக்கு முன்னுரிமை
இந்தோ - பசுபிக் கூட்டமைப்பின் குவாட் உச்சி மாநாட்டுக்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறலாம். ட்ரம்ப் நிர்வாகத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தொடர்ந்து உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவுடனான உறவை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக வொஷிங்டன் கருதுகிறது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக மார்கோ ரூபியோ பதவியேற்றவுடன் செய்த முதல் பணி, குவாட் கூட்டமைப்பு நாடுகளான இந்தியா,அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார். இரண்டாவது தடவையாக ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குள் வெளிநாட்டில் இருந்து வந்த முதல் தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான்” எனத் தெரிவித்தார்.