உக்ரைனுக்கு விஜயம் செய்யுமாறு ட்ரம்பிற்கு செலென்ஸ்கீ அழைப்பு
உக்ரைனுக்கு நேரில் வந்து மக்களின் நிலைமையை பார்வையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, அழைப்பு விடுத்துள்ளார்.
உக்ரைனில் தொடர்ந்து நடைபெறும் ரஷ்ய படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ரஷ்யாவுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் கைச்சாத்திடுவதற்கு முன்பு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த முடிவுகள் எதையும் செய்வதற்கு முன்பு, எங்கள் மக்கள், குழந்தைகள், படைவீரர்கள், அழிக்கப்பட்ட தேவாலயங்கள், மருத்துவமனைகள் இவை அனைத்தையும் நேரில் வந்து பாருங்கள்" என செலென்ஸ்கீ உருக்கமாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, உக்ரைனின் சுமி நகரத்தில் ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் குறைந்தது 34 பேர் உயிரிழந்தனர்; மேலும் 117 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் பொதுமக்கள் உடமைகளின் மீது தாக்குதல், சர்வதேச மனிதநேய சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக நிறைவடைய வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அந்தோனியோ குட்டரஸ், தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உலகின் பல நாடுகளின் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.