போர் முடிவுக்கு வருமா? ; புடின் அழைப்புக்கு ஜெலென்ஸ்கி கொடுத்த அதிரடி பதில்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நீண்டுகொண்டே செல்லும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்காக உக்ரைன் ஜனாதிபதியை மாஸ்கோவிற்கு வருமாறு ரஷ்யா உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி மாஸ்கோவிற்கு வருகை தந்தால், அவருக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி புடினின் உதவியாளர் யூரி உஷாகோவ் (Yuri Ushakov) தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு அவர் தயாராக இருந்தால், ரஷ்யா அவரை வரவேற்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி செலென்ஸ்கி, பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதை வரவேற்பதாகக் கூறினார்.
இருப்பினும், ரஷ்யா மாஸ்கோவிற்கு அழைப்பதானது பேச்சுவார்த்தையைத் தவிர்க்கும் ஒரு தந்திரமாக இருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
"எங்கள் நாட்டு மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் சூழலில் மாஸ்கோ செல்வது கடினம், பேச்சுவார்த்தைகள் நடுநிலையான இடத்தில் நடப்பதே சிறந்தது" என்ற தொனியிலேயே அவரது பதில்கள் அமைந்துள்ளன.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் அபுதாபியில் ஏற்கனவே முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. இதில் அமெரிக்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இரு தரப்பையும் இணக்கப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், ரஷ்யா தனது பிடிவாதமான சில நிபந்தனைகளை (யுக்ரைனின் சில பகுதிகளைக் கையளித்தல் போன்றவை) முன்வைத்துள்ள போதிலும், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப் பேசுவது போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என சர்வதேச அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
எது எப்படியிருப்பினும், தனது நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பதில் உக்ரைன் ஜனாதிபதி உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.