ஒரே இரவில் சாம்பலான 1,000 வீடுகள் ; மலேசியாவை உலுக்கிய பெரும் அனர்த்தம்
லேசியாவின் சபா மாநிலம் சந்தக்கான் (Sandakan) மாவட்டத்தில் உள்ள 'கம்பங் பஹாகா' என்ற மிதக்கும் கிராமத்தில் அதிகாலை 1:32 மணியளவில் ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
மரத்தூண்களால் கடலுக்கு மேல் கட்டப்பட்டிருந்த இந்த வீடுகள் மிக நெருக்கமாக இருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் தீ மிகவேகமாகப் பரவியது.

உடனடி உதவிகள்
சாலைகள் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாமல் போனதுடன், கடல் நீர் மட்டம் குறைவாக இருந்ததும் மீட்புப் பணிகளில் பெரும் சவாலை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் 9,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.