கால்பந்தாட்ட அரங்கில் 135 பேர் பலி; பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
இந்தோனேஷியாவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது அரங்கில் சனநெரிசலினால் 135 பேர் உயிரிழந்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கிழக்கு ஜாவாவின் மாலாங் நகரில் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெற்ற அரேமா எவ்சி மற்றும் பெர்செபயா சுரபயா கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியின்போது கடும் சனநெரிசல் ஏற்பட்டது.
இதனால், 40 சிறார்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். பார்வையாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்ததையடுத்து, அரங்கிலிருந்து பார்வையாளர்கள் வெளியேற முற்பட்டபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டது.
இதன்போது அரேமா கழகத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் அப்துல் ஹரீஸ், பாதுகாப்பு அதிகாரி சுகோ சுத்ரிஸ்னோ, மற்றும் ஹஸ்தர்மாவன் உட்பட பொலிஸ் அதிகாரி மூவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கில் ஏற்கெனவே அப்துல் ஹரீஸ், மற்றும் சுகோ சுத்ரிஸ்னோ ஆகியேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிழக்கு ஜாவா நடமாடும் பொலிஸ் பிரிவின் தலைவராக பதவி வகித்த ஹஸ்தர்மாவன் எனும் பொலிஸ் அதிகாரிக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கண்ணீர்ப்புகைப் பிரயோகம் நடத்தி, சனநெரிசலை ஏற்படுத்த வழிவகுத்தமை தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்யாமல் இருப்பதற்கான தெரிவு இருந்தது என நீதிபதி கூறினார்.
இவ்வழக்கில் பாம்பாங் சித்திக் அச்மதி, வஹ்யு சேட்யோ பிரானோட்டா ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்களை நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.