கொலம்பியாவில் தங்க சுரங்கம் இடிந்து 14 பேர் பலி
கொலம்பியாவின் நாரினோ மாகாணத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
நாரினோ மாகாணத்தின் சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகருக்கு அருகே உரிய அனுமதியின்றி இயங்கி வந்த தங்கச் சுரங்கமே இவ்வாறு திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது சுரங்கத்திற்குள் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக நாரினோ மாகாண ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஆகஸ்ட் மாதம் நாரினோ மாகாணத்தின் பொலிகார்பா நகரில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 13 பேர் உயிரிழந்திருந்தனர்.
கொலம்பியாவின் கிராமப்புறங்களில் உரிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் இன்றி இயங்கும் ஒழுங்குபடுத்தப்படாத சுரங்கங்களால் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.