பிரான்ஸில் வன்முறைப் போராட்டங்கள் ; நாட்டு மக்களுக்கு அவசர உரையாற்றிய இமானுவேல் மேக்ரான்
பிரான்ஸில் நாடு தழுவிய வன்முறைப் போராட்டங்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக அவசர உரையொன்றை ஆற்றியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், தற்போதைய சூழலில் மக்கள் கோபத்தையும் அவமானத்தையும் உணர்வதாகத் தெரிவித்தார்.

அமைதியான முறையில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடுபவர்களுக்கும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தி, கொள்ளையடித்தல் உள்ளிட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும் இடையே தெளிவான வேறுபாடு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வன்முறைச் செயல்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், வன்முறையில் ஈடுபட்டு சேதங்களை ஏற்படுத்தியவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும் என்றும், குற்றவாளிகள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதேவேளை, இன்னும் ஆறு மாதங்களில் பிரான்ஸில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வீதிகளில் வன்முறையில் ஈடுபடுவது நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என மேக்ரான் தெரிவித்தார்.
வன்முறைகள் ஜனநாயக விவாதங்களைச் சீர்குலைக்கும் எனக் குறிப்பிட்ட அவர், கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் விவாதித்து தீர்வுகளைக் காணுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.