டொராண்டோவில் 71 வயது மூதாட்டி கொலை வழக்கில் 14 வயது சிறுவன் நீதிமன்றில் முன்னிலை
டொராண்டோவில் கடந்த வாரம் குத்திக்கொலை செய்யப்பட்ட 71 வயது மூதாட்டியின் மரணத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்று டொராண்டோ நீதிமன்றத்தில் வீடியோ தொடர்பு மூலம் குறித்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
கடந்த 17ம் திகதி வியாழக்கிழமை காலை, டொராண்டோவின் பார்க்வே பொரஸ்ட் ட்ரைவ் Parkway Forest Drive மற்றும் ஷெப்பர்ட் Sheppard Avenue East அருகிலுள்ள வர்த்தக வளாகத்தில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், 71 வயதான மூதாட்டி ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடப்பதை கண்டனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு உயிரிழந்தார்.
71 வயதான ஷானாஸ் பெஸ்டோஞ்சி (Shahnaz Pestonji) என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவர் தனது வாகனத்தில் மளிகைப் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தபோதே தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதல் முதலில் “ஊக்கமற்ற தாக்குதலாக” வரையறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை, சிசிடிவி காட்சிகள் மற்றும் சாட்சிகளின் தகவல்களின் அடிப்படையில், இது ஒரு கொள்ளை முயற்சியின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு ஜூலை 28ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.