கனடாவில் கொலைக் குற்றச்சாட்டில் 16 வயது சிறுவன் கைது
கனடவின் ஓஷாவாவில் உள்ள பிரபல உணவகத்திற்கு வெளியே இரு குழுக்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் 23 வயது இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் ஒருவனைப் பொாலிஸார் கைது செய்துள்ளனர்.
சிம்கோ ஸ்ட்ரீட் நார்த் மற்றும் வின்செஸ்டர் ரோடு ஈஸ்ட் பகுதியில் ஆயுதங்களுடன் சிலர் மோதிக்கொள்வதாக டர்ஹாம் பிராந்திய பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு பலத்த காயங்களுடன் கிடந்த 23 வயது இளைஞரை மீட்டனர்.
ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். சம்பவத்தைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் கொலையாளிகளைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை அன்று பிராம்ப்டனைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தானாக முன்வந்து பொலிஸில் சரணடைந்தார்.
சிறுவர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் அந்தச் சிறுவனின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டில் டர்ஹாம் பிராந்தியத்தில் பதிவான மூன்றாவது கொலைச் சம்பவம் இதுவாகும். இது ஒரு தற்செயலான தாக்குதல் அல்ல என்றும், குறிப்பிட்ட இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லை என உறுதி அளித்துள்ளனர்.