நாடொன்றில் கலப்படம் செய்யப்பட்ட போதைப்பொருளால் 17 பேருக்கு நேர்ந்த சோகம்
அர்ஜென்டினாவின் எட்டு மாகாணங்களில் கலப்படம் செய்யப்பட்ட கோகைன் என்ற போதைப்பொருளை பயன்படுத்தியதாக கூறப்படும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 56-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹர்லிங்காம், சான் மார்ட்டின் மற்றும் டிரெஸ் டி பெப்ரரோ நகரங்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கலப்படம் செய்யப்பட்ட கோகைனை பயன்படுத்தியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் நபர் உயிரிழந்ததும் பொலிஸார் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகித்த ஒரு கும்பலை கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு,பிற போதைப்பொருள் கும்பல்களுடனான போட்டியில் செலவைக் குறைக்கும் நோக்கில் கோகைனில் சில பொருட்களை கலந்திருக்கலாம் அது நச்சுத்தன்மை கொண்டதாக மாறியிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கோகைனில் கலக்கப்பட்ட பொருள் என்னவென்று தெரியாததால் ஆய்வக முடிவுக்காக காத்திருப்பதாகவும் இறப்புகளைத் தடுக்க அவசர சேவைகள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அண்மையில் வாங்கிய எந்த போதைப்பொருள்களையும் பயன்படுத்த வேண்டாமென்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்திவுள்ளது.