கனடாவில் 1 மில்லியன் டொலர் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது
பிராம்ப்டனில் இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் விசாரணையின் பகுதியாக, சுமார் 1 மில்லியன் டொலர் மதிப்பிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் பீல் பிராந்திய பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணை புரொஜெக்ட் வின்னர் ‘Project Winner’ என பெயரிடப்பட்டு, 2025 செப்டம்பரில் பீல் பிராந்திய பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குழு 29 வயதான டொரொண்டோ நபர் ஒருவர் இந்த பிரதேசத்தில் பல போதைப்பொருள் பரிவர்த்தனைகளில் தொடர்புடையவர் எனத் தகவல் பெற்றது.

விசாரணையைத் தொடர்ந்து டொரொண்டோவில் உள்ள இரண்டு இடங்களில் சோதனை உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
அந்த இடங்களில் இருந்து 13 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோகெய்ன், மெத்தாம்பெட்டமைன் மற்றும் பெண்டனில் போன்ற போதைப் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மேலும், கைதுப்பாக்கி, தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 29 வயதான லுயிஸ் எலோசியஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.