7 வயது சிறுமி செலுத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: 2 குழந்தைகள் பலி!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் ஆல்பர்ட்டா எல்லைக்கு அருகில் உள்ள 'பூஸ் கூப்' என்ற கிராமப்புறப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள ஒரு கிராமப்புற சாலையில், ஐந்து சிறுவர்கள் 'சைடு-பை-சைடு' வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, வாகனத்தை ஓட்டிய 7 வயது சிறுமி கட்டுப்பாட்டை இழந்ததால், அந்த வாகனம் சாலையில் பலமுறை உருண்டு பயங்கர விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலேயே 8 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
வாகனத்தை ஓட்டிய 7 வயது சிறுமி, படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாகனத்தில் இருந்த மற்ற மூன்று குழந்தைகளுக்கு அதிர்ஷ்டவசமாக சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒரு பெற்றோராக, இந்த குடும்பங்கள் சந்தித்துள்ள கற்பனை செய்ய முடியாத, துயரமான இழப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நினைத்துப் பார்க்க முடியாத சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் எங்கள் இதயம் வருந்துகிறது என தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.