காஸாவில் திடீரென இடிந்து விழுந்த 7 மாடிக் கட்டடம் ; 5 குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
காஸாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களால் சேதமடைந்த 7 மாடிக் குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில், 5 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (16) அதிகாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காஸாவின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
போதிய மீட்பு உபகரணங்கள் இல்லாமை மற்றும் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மீட்புப் பணிகளை முன்னெடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தொடர்ச்சியான போர்த் தாக்குதல்களால் காஸாவில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகளின்றி சேதமடைந்த கட்டடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.