பாகிஸ்தானில் பாடசாலை கூரை இடிந்து விழுந்ததில் ஒரு ஆசிரியை உட்பட 20 மாணவர்கள் பலி
பாகிஸ்தானின் பெஷாவர், அப்ரிடி ஆபாத் (Afridi Abad) பகுதியில் அமைந்துள்ள 'அல் கெய்ர்' (Al Khair) தனியார் பாடசாலையின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில், 20 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த மாணவர்களில் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 18 சிறுவர்களும் 2 சிறுமிகளும் அடங்குவர் எனப் பெஷாவரிலுள்ள லேடி ரீடிங் மருத்துவமனையின் (Lady Reading Hospital) பேச்சாளர் முஹம்மது ஆசிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், மருத்துவமனையில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வகுப்பறைகளுக்குள் வீழ்ந்த இடிபாடுகள்: மாணவர்கள் வழக்கம்போல் வகுப்பறைகளில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இப் பிரமாண்ட கூரை இடிந்து விழுந்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 'ரெஸ்கியூ 1122' அமைப்பினரும் பொலிஸாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் சம்பவ இடத்தில் திரண்டதால் பெரும் பதற்றமும் சோகமும் நிலவியது.
முதல் மாடி கூரை இடிந்து விழுந்தபோதிலும், தண்ணீர் குடிப்பதற்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்ததால் தனது மகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாகப் பெற்றோர் ஒருவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
தலைவர்கள் இரங்கல்; விசாரணைக்கு உத்தரவு: இக்கொடூர விபத்து குறித்து அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ள கைபர் பக்துன்க்வா ஆளுநர் பைசல் கரீம் குண்டி, விபத்திற்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிஃப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆகியோர் இச்சம்பவம் குறித்துத் தீவிர கவனஞ்செலுத்தியுள்ளதுடன், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறும், பாடசாலை கட்டிடங்களின் பாதுகாப்புத் தரத்தை உடனடியாக மதிப்பீடு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானில் தரமற்ற கட்டுமானப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமையினால் கட்டிடங்கள் மற்றும் கூரைகள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.