லண்டனில் மக்கள் கூட்டத்திற்குள் இடம் பெற்ற கோர விபத்தில் 20 வயது பெண் பலி
லண்டனில் கிங்ஸ் கல்லூரிக்கு வெளியே மக்கள் கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்த கோர சம்பவத்தில் 20 வயதுடைய பெண் ஒருவர் மரணமடைந்ததுடன் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கோர சம்பவத்தில் மற்றொரு பாதசாரி உயிருக்குப் போராடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொலிசார் தெரிவித்துள்ள தகவலில், மூன்று பாதசாரிகள் காயமடைந்தனர், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட காரணங்களால் மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 26 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் பொலிஸ் காவலில் நீடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன், மற்றவர் லேசான காயங்களுடன் காணப்படுவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக இருக்க வாய்ப்பில்லை என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. லண்டனின் பிரபலமான பகுதியில் பட்டப்பகலில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது,
மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர் அதிர்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மரணமடைந்தர் தொடர்பில் தகவலேதும் வெளியிடப்படவில்லை.
அவர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட பின்னரே தகவல் வெளியிடப்படும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சாரதி 26 வயது நபர் என மட்டுமே பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.