இதுவரை 2,000 பேர் படுகொலை... அதிரவைத்த நாட்டின் தலைவர்
மியான்மரில் ஜனநாயகத்திற்காக போராடிய 2,000 போராட்டக்காரர்கள் இதுவரை கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் தலைவர் துவா லஷி லா தெரிவித்துள்ளார்.
மியான்மரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவரான ஆங் சான் சூச்சி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவ ஆட்சிக்குழு.
இந்த நிலையில், ஆங் சான் சூச்சி ஆதரவு தலைவர்கள் மற்றும் ஜனநாயகத்திற்காகப் பாடுபடும் எஞ்சிய தலைவர்களை ஒன்றிணைத்து தேசிய ஒற்றுமை அரசு (NUG) உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் செயல் தலைவராக உள்ள துவா லஷி லா தன்னை மியான்மரின் ஜனாதிபதியாக பிரகடனப்படுத்திக் கொண்டார். தலைமறைவாக வாழ்ந்துவரும் இவர், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில்,
மியான்மரில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒன்றிணைந்த போராட்டம் தேவையாக உள்ளது. இதுவரை நடந்த சண்டையில் எங்கள் தரப்பில் 2,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்.
எங்களுக்கு எதிராக போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக மியான்மரில் இருந்து இதுவரை 13 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் என்றார்.