3,000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கம் எகிப்தில் கண்டுபிடிப்பு
எகிப்தில் 3,000 ஆண்டுகள் பழைமையான தங்கச் சுரங்கப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எகிப்து பிரமிடுகள் போன்று, இது வருங்காலத்தில் முக்கிய சுற்றுலாத் தளமாக உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எகிப்தின், மார்சா ஆலமின் பகுதிக்கு தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, கி.மு. 1000ஆம் ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்சாலைக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
"லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நகரத்தில் டோலமிக் காலத்திற்குச் சேர்ந்த பழங்கால நாணயங்கள், அரிய கலாச்சாரச் சின்னங்கள், மற்றும் பல்வேறு பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தங்கத்தை அரைக்கும், நொறுக்கும் மற்றும் வடிகட்டும் பணிகளுக்கான படுகைகள், உருக்கும் உலைகள், மற்றும் பிற தொழில்சார்ந்த அமைப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இது தங்கச் சுரங்க தொழில் மையமாக இருந்திருக்கலாம் என்பதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் அக்கால மக்கள் வாழ்வியல், நிர்வாகம், தொழிலாளர் வாழ்க்கை மற்றும் அதிகாரிகள் பற்றிய முக்கியமான தகவல்களையும் வெளிக்கொணர்கின்றன.