ஆஸ்திரேலியாவில் ஒரே மாதத்தில் 3-வது முறை மதவெறி தாக்குதல்!
ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களாக மதவெறி சார்ந்த தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒரே மாதத்தில் 3-வது முறை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த 12 ஆம் திகதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதி இருந்தது.
கோவிலின் சுவர் மீது இந்தியா ஒழிக என பொருள்படும் வகையிலான இந்துஸ்தான் முர்தாபாத் என வர்ணம் பூசி உள்ளனர். இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்துள்ளனர்.
மோடிக்கு எதிராகவும் வாசகங்கள்
இதற்கு கேரள இந்து சமூகமும் கண்டனம் தெரிவித்தது. அதுமட்டுமல்லாது பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோவில் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
கடந்த 16 ஆம் திகதி மற்றொரு இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதுடன் கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது.
இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் அதில் எழுதப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஆல்பர்ட் பூங்கா பகுதியில் உள்ள இந்து கோவிலான இஸ்கான் கோவில் மீது இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு, அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதனால், ஆஸ்திரேலியாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
பக்தி யோகா இயக்கத்தில் ஈடுபட்டு வரும் பிரபல இஸ்கான் கோவிலின் சுவரில் காலிஸ்தான் வாழ்க என்று எழுதப்பட்டு இருப்பதாக தி ஆஸ்திரேலியா பத்திரிகை தெரிவித்து உள்ளது.
வழிபாட்டு தலத்தில் இதுபோன்ற அவமதிப்பு செயல்களை பார்த்து கோவில் நிர்வாக அதிகாரிகள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து இதுபோன்று இந்து கோவில்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தப்படுவது பற்றி அவசர கூட்டத்தில் மத தலைவர்கள் ஆலோசனை செய்து வந்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடந்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.