50க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ஆடம்பர கார்களைத் திருடிய கும்பல்: 4 சிறுவர்கள் கைது!
கனடாவின் டொரண்டோ பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆடம்பர கார்களின் சாவிகளைத் திருடிச் சென்ற வலையமைப்பைச் சேர்ந்த 4 சிறுவர்களை யோர்க் பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீடுகளின் கேரேஜ்கள் மற்றும் வீதிமுற்றங்களில் நிறுத்தப்பட்டிருந்த உயர்ரக ஆடம்பர வாகனங்களின் சாவிகளைத் திருடும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் ‘புராஜெக்ட் ஹவ்லர்’ என்ற பெயரில் சிறப்பு விசாரணையைத் தொடங்கினர்.
பல வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்தத் தொடர் திருட்டுகளுக்குப் பின்னால் ஒரு சிறுவர் கும்பல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சில சம்பவங்களின் போது, இவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களைக் காட்டி வீட்டின் உரிமையாளர்களை மிரட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரிச்மண்ட் ஹில் பகுதியில் முந்தைய நாள் திருடப்பட்ட வாகனத்தில் சந்தேக நபர்கள் பயணிப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். டொரண்டோவின் 'தார்ன்க்ளிஃப் பார்க் டிரைவ்' மற்றும் 'ஓவர்லியா பூலேவார்ட்' பகுதியில் வைத்து பொலிஸார் அவ்வாகனத்தைச் சுற்றி வளைத்தனர்.
தப்பி ஓட முயன்ற 3 சிறுவர்களைத் துரத்திச் சென்று பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 7 ஆடம்பர வாகனங்கள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4வது சிறுவனையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டொரண்டோவைச் சேர்ந்த 13, 14 மற்றும் இரண்டு 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர்.
கனடாவின் ‘இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்’ விதிகளின்படி, கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெயர்களையோ அல்லது அடையாளங்களையோ வெளியிட பொலிஸாருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் மேலும் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.